ஈரோடு: தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவருவதால் இன்றிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், தமிழ்நாடு-கர்நாடகா இடையே இரவு நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகள் ரத்துசெய்யப்பட்டன. இரவு நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகள் காலை நேரத்துக்கு மாற்றியமைத்து இரவு 10 மணிக்குள் திரும்பிவருவதற்கேற்ப அரசுப் பேருந்துகள் புறப்படும் காலநேரம் மாற்றப்பட்டது.
சத்தியமங்கலம் போக்குவரத்துப் பணிமனையிலிருந்து மைசூர், சாம்ராஜ்நகர், ஹாசன், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு 11 அரசுப்பேருந்துகள், கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களிலிருந்து 9 பேருந்துகள் என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்பட்டுவந்தன.
தற்போது, இந்தப் பேருந்துகள் அனைத்தும் காலை 6, 7, 10, 11 மணியளவிலும், நண்பகல் நேரத்திலும் புறப்படும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூர் செல்லும் பேருந்துகள் ஊரடங்கு அமலாகும் நேரத்துக்கு முன்பாக வந்து சேரும்.
அதேபோல், கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு காலை நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கர்நாடகத்தில் இரவுநேர ஊரடங்கு அமலில் இல்லாததால் தமிழ்நாடு வரும் கர்நாடகப் பேருந்துகள் சாம்ராஜ்நகரில் தங்கி அதிகாலை புறப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டைமிங் தகராறு: பேருந்தை நிறுத்தியதால் காெந்தளித்த பயணிகள்