ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பூங்கரைப்புதூரில் ரூ.67 லட்சம் மதிப்பில் 87 பயனாளிகளுக்கு கறவை மாட்டுக் கடன் மற்றும் கன்றுக்குட்டி கடன் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.250 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது" எனத் தெரிவித்தார். அதையடுத்து அவர், "நீட் தேர்வில் தமிழ்நாடு அரசின் கொள்கை என்பது தேர்வு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான்.
மேலும் நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பரவிவரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. அந்தச் செய்திகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிடவில்லை. பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என்று பலமுறை கூறிவிட்டேன். கரோனா வைரஸ் பரவல் குறைந்த பின் பெற்றோர்களிடம் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.
ஆன்லைன் வகுப்புகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம். மேலும் தற்காலிக ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து 10ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகள் கட்டணம் கேட்டு பெற்றோருக்கு தொந்தரவு கொடுத்தால் நடவடிக்கை பாயும்...!