ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 802 பயனாளிகளுக்கு ரூ.92 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு அரசு 64 வகையான நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கிவருகிறது. தற்போது நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளதால், இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு ரூ. 80முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலை ஏற்றத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒருகிலோ ரூ.300முதல் 500வரை உயர்ந்திருக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பவானி மற்றும் காவிரி ஆறுகளில் கலக்கப்படும் கழிவுகளை தடுக்க பவானி மற்றும் ஈரோடு பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அறிக்கை தயார் செய்து சுற்றுச்சூழல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்றார்.
விவசாய கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், முதலமைச்சர் விரைவில் விவசாய கடன் தள்ளுபடி குறித்து அறிப்பார் என்றார்.
இதையும் படிங்க:மலைவாழ் மக்களுக்கான புதிய திட்டம் அறிமுகம்!