கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள வாணிப்புதூர் பேரூராட்சியில் விவசாய நிலங்கள் இருப்பதால் இரை தேடி மயில்கள் முகாமிட்டுள்ளன. வாணிப்புதூர் அலுவலகம் முன்பு மின்மாற்றிக்கோபுரம் உள்ளது.
மின்சாரம் தாக்கி இறந்த தேசிய பறவை
இங்கு மயில்கள் அவ்வப்போது சாலையை கடந்து பிற இடங்களுக்கு செல்வதுண்டு. இந்நிலையில் மரத்தில் முகாமிட்டிருந்த மயில்களில் ஒன்று மேலிருந்து கீழே பறக்கும்போது எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசியதில் மயில் உடலில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது.
அங்கிருந்த மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, மின்சாரம் தாக்கி தேசிய பறவை ஆண் மயில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்துபோன மயிலை எடுத்து காராச்சிகொரை வன கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்று, சத்தியமங்கலம் புலிகள் காப்பக மருத்துவர் அசோகன் இறந்துபோன மயிலை பிரேதப் பரிசோதனை செய்தார். அதனைத்தொடர்ந்து மயில் உடல் அங்குள்ள வனத்தில் புதைக்கப்பட்டது.