ஈரோடு கருங்கல்பாளையம் அருகே உள்ள திருநகர் காலனி பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தமிழ் தேசிய பேரியக்க மாநில அமைப்பாளர் பெ.மணியரசன் ஆகியோரை கருங்கல்பாளையம் காவல் துறையினர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
நாம் தமிழர் சீமான் ஈரோடு வருகை
இந்த வழக்கு ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் நடந்து வருகிறது. தற்போது இவ்வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை நகலை பெறுவதற்காக நீதிமன்றத்தில் கட்டாயம் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என மூவருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவை ஏற்றுக்கொண்ட மூவரும் இன்று நீதிபதி வடிவேல் முன்னிலையில் ஆஜராகினர். மூவரையும் மீண்டும் ஜனவரி மாதம் 5ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
234 தொகுதிகளிலும் தனித்து போட்டி
குற்றப்பத்திரிகை நகலை பெற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும். மக்களுடன் கூட்டணி அமைத்து, மக்களில் ஒருவனாக நின்று முழு நம்பிக்கையுடன் போட்டியிடப்போகிறோம்.
மக்களுடன் கூட்டணி
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அரசியலை அமைக்கவுள்ளதாகக் கூறும் ரஜினி,கமல் எம்ஜிஆரை முன்னெடுத்து அரசியல் செய்வது ஏற்புடையதல்ல. நாம் தமிழர் கட்சி காமராஜர் போன்ற மூத்த தலைவர்களை முன்னிறுத்தி நேர்மையான, தூய்மையான அரசியலை நடைமுறைப்படுத்துவோம். நாங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் வழி வந்த பிள்ளைகள்.
மத்திய அரசு விளக்க வேண்டும்
விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இதுவரை பாஜக தலைவர்கள் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடியது என்று விளக்கிக் கூறிட வேண்டும். போராடும் விவசாயிகளின் எதிர்ப்புணர்வுக்கு மதிப்பளித்து வேளாண் சட்டத்தில் உள்ள நன்மைகளை தெளிவுப்படுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் விலை உயர்வு: திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு