ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் இன்று ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக அளவில் இருப்பதால், இங்கு நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என திமுக கூட்டணியினர் கூறியதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் மற்றும் திமுக கூட்டணியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்திற்கு மேல் கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி அன்பு தென்னரசு மற்றும் பொதிகை சுந்தர் ஆகியோர் திமுக மற்றும் விசிகவினர் சேர்ந்து பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பின்னர் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 200க்கு மேற்பட்ட தொண்டர்கள் அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் அவர்கள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
சாலையில் அமர்ந்து கோசமிட்டுக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களால், தொடர்ந்து ராஜாஜிபுரம் பகுதியில் பரபரப்பு நீடித்து வருகிறது. இதனால் பதற்றத்தை தணிக்கும் விதமாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் இங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இடையே போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்துள்ளனர், ஆனால் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்!