பவானிசாகர் அருகே கணபதிநகரைச் சேர்ந்த ஜெயராஜ் - ரோஸ்மேரி தம்பதியினரின் 15 வயது மைனர் பெண், புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இயங்கி வரும் பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் சென்று வந்தார். இந்நிலையில் அதே பனியன் கம்பெனியில் திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே உள்ள மங்கரசு வலையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேஷ் (வயது 20) என்ற இளைஞர், அப்பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் அப்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி, வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ஜெயராஜ் முருகேஷ் கண்டித்ததோடு மைனர் பெண்ணை கடத்தியதாக புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையில் புகாரும் அளித்தார். இதைத் தொடர்ந்து முருகேஷ் மைனர் பெண்ணை ஜெயராஜ் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி புஞ்சைபுளியம்பட்டி எஸ்.ஆர்.டி தியேட்டர் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை முன்பு நின்றிருந்த ஜெயராஜிடம் முருகேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் முருகேஷ் அருகே கிடந்த இரும்புக்கம்பியால் ஜெயராஜை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஜெயராஜ் மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து காயம்பட்ட ஜெயராஜூக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இந்நிலையில் ரோஸ்மேரி புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் முருகேஷ் மீது அடிதடி வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயராஜ் செப்டம்பர் 7ஆம் தேதி காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினர் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து முருகேஷை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் முருகேஷ் புஞ்சைபுளியம்பட்டி விஏஓ சுரேஷ்பாபுவிடம் சரணடைந்தார். இதையடுத்து காவல் துறையினர் முருகேஷை சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - நடத்துநர் உள்பட இருவர் உயிரிழப்பு!