ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப்பகுதியில் ஏராளமான சிறுத்தை, புலி, யானைகள், காட்டெருமைகள் உள்ளன. குரங்குகளின் வாழ்விடமாகவும் திம்பம் மலைப்பாதை உள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் வாகன ஓட்டிகள் திம்பம் வழியாக பயணிக்கும்போது சாலையோரம் திரியும் குரங்குகளுக்கு தின்பண்டங்கள் வழங்குகின்றனர்.
இதனால், இயற்கைக்கு மாறான பொறித்த உணவு பொருட்களை சாப்பிட்டு பழகிய குரங்குகள், சாலையோரம் அமர்ந்து வாகனஓட்டிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இலை தழை, பழங்கள் போன்ற இயற்கையான உணவு பொருட்களை சாப்பிட்டு வந்த குரங்குகள் தற்போது காட்டுக்குள் செல்லமால் திம்பம் மலைப்பாதையில் திரிவதை அதிகமாக காண முடிகிறது.
பாட்டில் தண்ணீர், பொறித்த உணவுகளை சாப்பிடும் குரங்குகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மேலும், வாகன ஓட்டிகள் தரும் தின்பண்டங்களை வாங்க குரங்குகள் போட்டிபோட்டு செல்வதால் சிலசமயங்களில் வாகனங்களில் அடிபட்டு குரங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்கின்றன. இதனைத் தவிர்க்க குரங்குகளுக்கு தின்பண்டங்களை அளிக்க வேண்டாம் என வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.