சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நடப்பாண்டில் 256 ரூபாய் கூலியாக நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கான ஊதியத்தை 15 தினங்களுக்குள் வழங்கிட வேண்டும். ஆனால் 4 வாரங்களைக் கடந்தும் ஊதியம் வழங்கப்படாததால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், தொடர்ச்சியாக வேலை வழங்காமல் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் என வேலை வழங்கப்படுகிறது. ஆகவே, தொடர்ச்சியாக வேலை வழங்கப்பட வேண்டும். அந்தந்த குக்கிராமங்களிலேயே வேலை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்த மாவட்ட திட்ட அலுவலரிடம் ஈரோடு மாவட்ட நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.
மனுவை பெற்றுக்கொண்ட திட்ட அலுவலர் பாலகணேஷ், "தொடர்ச்சியாக வேலை வழங்கப்படும். அந்தந்த பகுதிகளிலேயே பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். ஊதிய பாக்கி குறித்து அரசிடம் முறையிடப்படும்" என்றார்.