தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்திட அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு அவசியமான மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பதில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு, மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழ்நாடு தற்சார்பு அடைவதற்கான வழிமுறைகள் குறித்து முதலமைச்சர் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை மே 11ஆம் தேதியன்று நடத்தினார். அதன்படி சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற பின்பு, திருமகன் ஈவேரா ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆய்வு மேற்கொண்டு உற்பத்தியைப் பெருக்கும் படி கோரிக்கை வைத்தார்.
நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் திருமகன் ஈவேரா. இவர் தந்தை பெரியாரின் கொள்ளுப் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா அச்சம்: விடுமுறை கேட்டு தமிழ்நாடு காகித ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்