ஈரோடு மாவட்டம் பெருந்துறை அதிமு எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் பெருந்துறையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களை மோசடியாக வீட்டுமனைப் பட்டாக்களாக மாற்றி, ஏழை எளிய மக்களுக்கு விற்பனை செய்து ஆளுங்கட்சியினர் என்று கூறி முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.
அரசின் அனுமதியும், அங்கீகாரமில்லாமல் போலியாக விற்பனை செய்யப்பட்டுள்ள இடத்தில் பூங்காக்களுக்கோ, சாலைகளுக்கோ, நூலகங்களுக்கோ, குடிநீர்த் தொட்டிகளுக்கோ இடம் ஒதுக்கிடாமல் வீட்டுமனைப் பட்டாக்களாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால், அரசின் முறையான அனுமதியின்றி அவ்விடத்தை வாங்கியவர்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
தேர்தலின் போது அப்பகுதி மக்களைச் சந்திக்கும் போது அங்கு எவ்வித திட்டங்களையும் செயலாற்ற முடியாத நிலையினால் கட்சியினருக்கு அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்கிற எண்ணத்துடன் சிலர் செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்று செயல்படுபவர்களுக்கு பத்திரப் பதிவுத் துறை அலுவலர்கள், மனைத் துறையினர் துணையாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதுதொடர்பாக விரைவில் முதலமைச்சரைச் சந்தித்து இது குறித்து அவரது கவனத்திற்கு கொண்டு வரப்படும். அதேபோல் அதிமுக காரர் எனக் கூறிக்கொண்டு தனி நபர் ஒருவர் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீர் நிலைகளை ஆக்ரமித்து 6 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட கட்டடத்தைக் கட்டியுள்ளார். இதுகுறித்து புகாரளித்தும் இதுவரை அந்தக் கட்டடம் இடிக்கப்படவில்லை. இதில் தொடர்புடைய அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திடவும், அதிமுகவுக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் குறித்தும் முதலமைச்சரிடம் முறையிடுவேன்" என்றார்.
இதையும் படிங்க: ஜனவரியில் கட்சி தொடங்குகிறாரா நடிகர் ரஜினிகாந்த்?