கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி பகுதியில் வசித்து வந்த ஸ்ரீதேவி என்பவர் 2015ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி விக்னேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கும் கோவை நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
தாய், தந்தை, சகோதரர் ஆகியோரை பிரிந்த ஸ்ரீதேவி, ஈரோடு சம்பத் நகர் பகுதியில் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், பிரவீன் என்ற நண்பருக்கு போன் செய்து தற்கொலை செய்துகொள்ள போவதாகக் கூறிவிட்டு ஸ்ரீதேவி தனது செல்போனை அணைத்து வைத்துள்ளார்.
இதையடுத்து, உடனடியாக பிரவீன் அளித்த தகவலின் பேரில் ஈரோடு வடக்கு காவல் துறையினர் ஸ்ரீதேவி தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அங்கு ஸ்ரீதேவி தற்கொலையால் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
பின்னர், ஸ்ரீதேவியின் உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் ஸ்ரீதேவியின் தற்கொலை தொடர்பாக தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104