உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். சாதாரண தும்மல், சளி ஏற்பட்டாலே கரோனா வைரஸ் பாதிப்பாகயிருக்குமோ என பயத்தில் காலம் நகர்ந்துகொண்டிருக்கிறது. வைரஸ் பரவலைத் தடுக்க அரசும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்களுடன் பல்வேறு தனியார் அமைப்பினரும் கைகோர்த்துள்ளனர். அந்த வகையில் ஈரோடு மாநகராட்சி சேர்ந்து தன்னார்வ அமைப்பினர் 'மிஷன் 0 ஈரோடு' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்திஉள்ளது.
அந்தத் திட்டத்தில் 5 நடமாடும் மருத்துவப் பரிசோதனை வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர், இரு செவிலியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் சென்று மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
அந்த வாகனங்கள் நாள்தோறும் காலை 7 மணி முதல் 1 மணி, 11 மணி முதல் 1 மணி, மதியம் 3 மணி முதல் 5 மணிவரை என மூன்று நேரங்களாக செயல்படுகின்றன. அனைத்து வார்டுகளிலும் மக்களின் வீட்டுப் பகுதிகளுக்கே சென்று தகுந்த இடைவெளியுடன் சளி, காய்ச்சல், கரோனா உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
அந்தப் பரிசோதனையில் முதல்கட்டமாக அனைவருக்கும் இன்ஃப்ராரெட் தெர்மாமீட்டர் (infrared thermometer) பரிசோதனை செய்யப்படுகிறது. அதையடுத்து சளி, காய்ச்சல் பரிசோதனைகள் மூன்றும் ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டால் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன் பரிசோதனை முடிவுகள் அடுத்த நாள் அதே நேரம் அவர்களின் செல்போன் எண்ணுக்கு தெரிவிக்கப்படுகிறது. அதில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டால் அவர்களை சுகாதாரத்துறை உதவியுடன் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்துகின்றனர்.
சாதாரண சளி, உடல் வலி, மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், விட்டமின் மாத்திரைகள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. தீவிர காய்ச்சல் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து மருத்துவர் அபுல்ஹசன் கூறுகையில், "மிஷன் 0 ஈரோடு திட்டத்தின் கீழ் அனைத்து மக்களுக்கும் அவர்களது வீட்டுப் பகுதிகளுக்கு சென்று கரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஈரோடு மாவட்டத்தை கரோனா வைரஸ் பாதிப்பில்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அதற்காக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் தனியார் அமைப்பினருடன் கைகோர்த்துள்ளது.
கரோனா மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதற்கு அரசு மருத்துவமனை நாட தற்போது மக்கள் தயங்குகின்றனர். ஏனென்றால் அங்கு கரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு அச்சத்தை வரவழைக்கிறது. அந்த அச்சத்திற்கு தற்போது இடமில்லை. மக்கள் இருப்பிடத்திற்கு சென்றே பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் அவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.
அதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்துகொண்ட கருங்கல்பாளையம் பகுதி பவித்ரா என்பவர் தெரிவிக்கையில், "கரோனா பரிசோதனைக்கு மருத்துவமனை செல்ல பயமாக இருந்தது. ஆனால் எங்களது வீட்டுப் பகுதிகளுக்கே வந்து மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்வது பயத்தைப் போக்கிடும் வகையில் உள்ளது.
பரிசோதனை செய்யப்படும்போது தகுந்த இடைவெளி, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. சளி, காய்ச்சலுக்கு மாத்திரைகளும் உடனடியாக வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் திருப்தியாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முழு ஊரடங்கு - ஈரோட்டில் வெறிச்சோடிய சாலைகள்!