ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஒடையாக்கவுண்டம்பாளையம் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் சேவையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்னர் ஊஞ்சப்பாளையத்தில் நடைபெற்ற சமுதாய நலக்கூடம் புதிய கட்டடப்பணி பூமி பூஜையில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "சாதிக்கொரு கிணறு இருந்ததை மாற்றி அனைவரும் ஒரே கிணற்றில் தண்ணீர் எடுக்கலாம் என்ற நிலையை உருவாக்கியவர் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர். சத்துணவை தந்து சரித்திரம் படைத்தார். அவர் வழியில் வந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளாட்சி துறையில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற மனித நேயமிக்க தலைவர்கள் வரிசையில் தற்போது எடப்பாடி பழனிசாமியும் உள்ளார். பொய்யான வாக்குறுதிகளை தருவது தான் திமுகவின் வேலையாக உள்ளது. பொதுமக்கள் வியக்கும் அளவு தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்றத்தினர்!