ஈரோடு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஆய்வு செய்வதற்காக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஈரோடு வந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நெல்லுக்கு உரிய விலை உடனடியாக கிடைக்க வேண்டும்,கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் நிலை களைய படவேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திமுகவால் கடந்தாண்டு 4 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 48 ஆண்டுகளுக்குப் பின் சாதனை படைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் மற்றும் தொழிலாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 54 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது.
அதன் மூலம் 57ஆயிரத்து 170 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 119 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதில் 10 ஆயிரத்து 781 நெல் விளைவித்த விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலுள்ள குறைகள் பிரச்சினைகள் குறித்த புகார் அளிக்க இலவச அழைப்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபம் கழகத்தின் தலைமையகத்தில் கட்டுப்பாட்டில் உள்ள 18005993540 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ 376 ஆக இருந்த அரிசி ஆலைகள் இந்த அரசு பொறுப்பேற்று 199 அரிசி ஆலைகளாக அதிகப்படுத்தியுள்ளன. அதன்படி 575 ஆலைகள் தற்போது தமிழ்நாட்டில் செயல்படுகிறது. விவசாயிகளின் நலன் கருதியும் பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கவும் மானிய கோரிக்கைகளில் (ppp public private partnership) பொது தனியார் கூட்டு திட்டத்தில் 6 இடங்களில் தினந்தோறும் 3 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லை அரைக்கும் வகையில் இத்துறை செயல்படுகிறது.
திமுக ஆட்சியில் 11 மாதத்தில் 11 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் உற்பத்தி செய்த நெல்லை மழையால் பாதிக்கப்படாத வண்ணம் நேரடியாக அரிசி ஆலைகளுக்கு அனுப்பும் திட்டத்தை இத்துறை செயல்படுத்திக் கொண்டுள்ளது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் பல்லாயிர கணக்கான நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து புத்தகமாக அச்சடித்து வழங்கியுள்ளோம், படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.
இதையும் படிங்க: மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு பாராட்டு