தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்ததை தொடர்ந்து மாநில அரசு இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது. பின்னர், தொற்று குறைய தொடங்கியதால் ஊரடங்கை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதனிடையே பல்வேறு அரசியல் தலைவர்கள், ஆட்சியர்கள், பிரபலங்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சரும், ஈரோடு மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான முத்துசாமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக அறிவித்துள்ளார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ள அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே, வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது