ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பில் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர், தலைவர் துணைத்தலைவர் பதவிக்கு விண்ணப்பம் அளித்தவர்களிடம் வனத்துறை அமைச்சரும், ஆதி திராவிடர் நலக்குழு துணைத்தலைவருமான மதிவேந்தன் நேர்காணல் நடத்தினார்.
அப்போது பேசிய அமைச்சர் மதிவேந்தன், "மு.க.ஸ்டாலின் முதன் முதலில் முதலமைச்சராக இருக்கும் அமைச்சரவையில் நானும் அமைச்சராக இருப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. பெரிய பெரிய ஜாம்பவான்கள் வகித்த வனத்துறை அமைச்சர் பதவியை அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த எனக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
கடந்த தேர்தலில் அருந்ததியினர் 68 சதவீதமும், மற்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் 50 சதவீதம் பேரும் திமுகவிற்கு வாக்களித்து உள்ளனர். அருந்ததியர் சமுதாயத்திற்கு 3 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தது மட்டுமில்லாமல், உண்மையாக உழைப்பவருக்கு கட்சியில் உரிய அங்கீகாரத்தை மு.க.ஸ்டாலின் அளித்து வருகிறார். வனத்துறை அமைச்சராக நானும், சென்னை மேயராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவருக்கும் பதவி கொடுத்து உரிய அங்கீகாரத்தையும், வாய்ப்பையும் பெற்றுத்தந்துள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: ‘இண்டிகோ விமானத்தில் நடந்தது என்ன’ - அண்ணாமலை விளக்கம்