ஈரோடு: சென்னிமலையில் நேற்று (ஜூன் 30) நடந்த சென்கோப் டெக்ஸில் ஆய்வு, கலந்துரையாடல் கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காந்தி, “தமிழ்நாட்டில் 36 ஆயிரமாக இருந்த கரோனா பாதிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலனின் அதிரடி நடவடிக்கையால் தற்போது 53 நாள்களிலேயே ஐந்தாயிரமாகக் குறைந்துள்ளது.
மேலும், கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் நெசவாளர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிய முதலமைச்சர் கூறியதின் அடிப்படையில் இன்று (ஜூன் 30) ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இது திமுக ஆட்சி அல்ல; மக்களாட்சி
நெசவாளர்கள் கொடுக்கும் கோரிக்கைகள் குறித்து ஜூலை 6ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்தவுள்ளார். கடந்த பத்தாண்டுகளாக நடைபெறாத பணிகள் மட்டுமல்ல; மக்களுக்குத் தேவையான அனைத்துப் பணிகளும் நிறைவேற்றப்படும். இது திமுக ஆட்சி அல்ல; மக்களாட்சி, மக்களுக்குத் தேவையான பணிகளை நிறைவேற்றப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை வழங்குவது குறித்து ஏற்கனவே கொடுத்த நடைமுறைப்படி வழங்கப்படுகிறது. புதிதாக நாங்கள் எதுவும் ஆர்டர் கொடுக்கவில்லை.
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச வேட்டி சேலையைப் பொதுமக்கள் பெரிதாகப் பயன்படுத்துவதில்லை. எனவே புதிய வண்ணங்களில் தரமானதாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக பெயரை தவறாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ