ஈரோடு மாவட்டத்தில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கேன் உற்பத்தியாளர்களின் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும், மூடப்பட்டுள்ள குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் தொழிற்சாலைகளை திறந்திட அனுமதி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குடிநீர் கேன் விநியோகஸ்தர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்து செயல்பட்டு வரும் குடிநீர் கேன் உற்பத்தித் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி செயல்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அந்தவகையில், ஈரோடு மாவட்டத்தில் 33 தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
இந்நிலையில் நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் குடிநீர் உற்பத்தியாளர்களுக்கு விதிகளைத் தளர்த்தி தண்ணீர் எடுக்க அனுமதி, வழங்கிட தமிழ்நாடு முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் குடிநீர் கேன் விநியோகஸ்தர்கள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில், கேன் உற்பத்தி தொழிற்சாலைகளை திறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
குடிநீரை வழங்கி வரும் நிறுவனங்களை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கேன் குடிநீர் விநியோகஸ்தர்கள் பெருமளவில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அபாயகரமான மருத்துவக் கழிவுகள்: மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே கொட்டப்படும் அவலம்