ஈரோடு மாவட்டத்தில் அன்றாடம் உழைத்து, ஊதியம் ஈட்டி வாழ்க்கையை நடத்தும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் பலர் தங்களது கல்வி, மருத்துவம், திருமணம், குடும்ப அவசர தேவை உள்ளிட்டவற்றுக்காக பொதுத்துறை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற இயலாத நிலையில், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளனர்.
இவர்கள், இதற்கான தவணை தொகையை கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தவறாமல் செலுத்தி வந்த நிலையில், தற்போது வேலையின்றி வாழ்க்கையை நடத்தவே இவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, கடன் நிலுவைத் தொகைகளை செலுத்துவதற்கு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கால அவகாசம் அளித்து ரிசர்வ் பேங்க் உத்தரவிட்டது.
ஆனால், அவற்றைப் பின்பற்றாமல் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவன அலுவலர்கள், கடன் தவணை தொகையை உடனடியாகச் செலுத்துமாறும், தவணை தவறிய தொகைக்கு அபராத வட்டி செலுத்துமாறும் பெண்களைக் கட்டாயப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், கடன் தவணை தொகையை செலுத்துவதற்கு வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், தவணை தவறிய மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆறு மாதங்களுக்கு அபராத வட்டி வசூலிப்பதைத் தடுத்து நிறுத்தவும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் ஜெயராமனிடம் 100க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: நாகர்கோவில் காசி தந்தை கைது