ஈரோடு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பைக் குறைத்திடும் வகையில் அங்குள்ள காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், பழக்கடைகள் மற்றும் பாலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்களிடம் அவர்களது ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்திட வேண்டும் என்று ஆட்சியர் சி.கதிரவன் வியாபாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், நோய் பரவலைத் தடுத்திடும் வகையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், இந்த நடைமுறையை பின்பற்றுவது சற்று கடினமானது என்றும் ஆட்சியரின் உத்தரவிலிருந்து வியாபாரிகளுக்கு விலக்க அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் சி.கதிரவனிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
இது குறித்து பேரவையினர் கூறுகையில், "கடந்த சில வாரங்களாகத்தான் மாவட்டம் முழுவதுமுள்ள காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், பழக்கடைகள் மற்றும் பாலகங்களுக்கு ஓரளவு மக்கள் வருகை தருகின்றனர். ஆட்சியரின் உத்தரவை பின்பற்றுவது சற்று கடினமானதாக இருப்பதால், அவரின் அறிவிப்பிலிருந்து வியாபாரிகளுக்கு விலக்க அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்ததாக" பேரவையினர் கூறினர்.