ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சூரம்பட்டி நால் ரோட்டில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்ரமணியம் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் ரகுராமன் முன்னிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து இன்று (பிப்.23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா கோரப்பிடியில் சிக்கி அன்றாட வாழ்க்கையை கடக்கவே சிரமப்படும் தற்போதைய நிலையில், ஏழை எளிய நடுத்தர மக்களின் தலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை சுமத்தும் பாஜக அரசை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களை நம்பியிருக்கும் மக்கள் இந்த விலையேற்றத்தால் துன்பத்துக்கு ஆளாகின்றனர் எனவும், பெட்ரோலிய பொருள்களின் விலையேற்றத்தால் ஏற்கனவே அதிக விலைக்கு விற்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாகவும் விமர்சித்தனர்.
மேலும், உடனடியாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மாட்டுவண்டியில் பயணித்த எம்எல்ஏ!