ஈரோடு: நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம் மாயாற்றில் செந்நிறத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம் கிராம மக்கள் அன்றாடத் தேவைகளுக்கு மாயாற்றைத்தாண்டி தான் செல்ல வேண்டும். தற்போது மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மாயாற்றைத்தாண்டி மக்கள் செல்லமுடியாது.
இதனால் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம், அல்லிமாயாறு, சித்திராம்பட்டி மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இருப்பினும் அவரசத்தேவைக்கு கல்லாம்பாளையம், அல்லிமாயாறு மக்கள் கல்லாம்பாளையம் மாயாற்றில் கடந்து வருகின்றனர். இன்று (ஜூலை 15) கல்லாம்பாளையம் மாயாற்றில் வெள்ளம் அதிக இரைச்சலுடன் வேகமாக பாய்ந்து ஓடிய நிலையில், கல்லாம்பாளையத்தைச் சேர்ந்த 3 பேர் பரிசலில் மாயாற்றைக் கடக்க முயன்றனர்.
அதிவேகமாக சென்ற நீரில் பரிசல் சிறிது தூரம் கட்டுப்பாட்டை இழந்து சென்றபோது, பரிசலை இயக்கும் புல்லன் சாமர்த்தியமாக துடுப்பை வேகமாக இயக்கி கரைசேர்த்தார். ஆபத்தான பயணமாக இருந்தாலும் 4 நாள்களாக வெள்ளம் வடியாத நிலையில், அவசரத் தேவைக்காக பரிசலை இயக்க வேண்டியுள்ளது என பரிசலை இயக்குபவர் புல்லன் தெரிவித்தார். மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்பது 100 ஆண்டு கால மக்களின் கோரிக்கையாக உள்ளது.