சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லி பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளையும் மல்லிகைப் பூக்கள் பறிக்கப்பட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
நாளை இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் அட்சயதிருதியை உள்ளிட்ட விசேஷ தினங்கள் உள்ளதால் மல்லிகை பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப் பூ 500 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று விலை அதிகரித்து கிலோ 800 ரூபாய்க்கு விற்பனையானது.
மல்லிகை பூக்களை வியாபாரிகள் அதிக விலை கொடுத்து மூட்டை மூட்டையாக வாங்கி வாகனங்களில் ஏற்றி விற்பனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் மாலை தொடுக்க பயன்படுத்தப்படும் சம்பங்கிப்பூ கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையானது. மல்லிகைப்பூ ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனையானதால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: கர்நாடக - மகாராஷ்டிர எல்லைப் பிரச்னை: பசவராஜ் பொம்மையும் அஜித் பவாரும் கருத்து மோதல்!