ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, கடத்தூர், கோபி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டுகளை பெற்று சிலர் முறைகேடு செய்ததாக மாவோயிஸ்ட்களான கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரூபேஷ், மதுரை மாவட்டம் குயவர்பாளையம் அப்பர்லேன் பகுதியைச் சேர்ந்த கண்ணன், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த சமயநல்லூர் பகுதியை சேர்ந்த வீரமணி ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதில், கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை சிறையிலும், ரூபேஷ் கேரளா மாநிலம் திருச்சூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விசாரணைக்காக ஈரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மாவோயிஸ்ட்டுகள் 3பேரும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் இன்று அழைத்து வரப்பட்டு பின்னர் அவர்கள் நீதிபதி உமா மகேஸ்வரி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த மாதம்(அக்டோபர்)1ஆம் தேதி மீண்டும் அவர்களை ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இந்த உத்தரவினை தொடர்ந்து மாவோயிஸ்ட்டுகள் 3 பேரையும் மீண்டும் காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
அப்போது அவர்கள் மாவோயிஸ்ட்டுகள் தேச பக்தர்கள், புதிய கல்வி கொள்கையை கிழித்து எறிவோம், இந்தி மொழி திணிப்பினை எதிர்ப்போம் என கோஷமிட்டபடி சென்றனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய 14 பேர் கைது!