ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மலைப்பகுதி கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவக்குழு சேவை வாகனம், புதிய 108 அவசர ஊர்தி மற்றும் புதிய தாய் சேய் நலன் ஊர்தி, புதிய அமரர் ஊர்தி சேவையினை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி உள்ளிட்டப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், 'இப்பகுதியில் உள்ள 33 கிராமங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மலை கிராமங்களைச்சேர்ந்த மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மருத்துவக்கட்டமைப்பு மற்றும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்செயல்பாடுகள் குறித்து ஆய்வுமேற்கொள்ளப்பட்டுள்ளது.
பர்கூர் மற்றும் ஓசூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதி மேம்படுத்துவதற்கு கூடுதலாக 7 பணியிடங்கள் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு இங்கேயே மகப்பேறு சேவை சிறந்த முறையில் கிடைக்கப்பெறும்' என்றார்.
மேலும் 'இப்பதியில் வாழும் மலையாளி இன மக்களுக்கு பழங்குடி மக்கள் என சாதிச் சான்றிதழ் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். முதலமைச்சரின் கவனத்திற்குக்கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மலைப்பகுதியில் உள்ள குடியிருப்புப்பகுதியில் சாலைகளை மேம்படுத்துவதற்கு வனத்துறையின் அனுமதி பெற்று விரைவில் சீரமைக்கப்படும்' என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், 'நடப்பாண்டு 74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை தளவாடங்கள் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
மேலும் RTPCR, CT SCAN, DIALYSIS போன்ற கருவிகளை வாங்குவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 100 சித்த மருத்துவமனைகள் அமைப்பதற்கு ஆயுஷ் அமைச்சர் அனுமதி அளித்துள்ளார். விரைவில் அந்தப் பணிகள் முடிக்கப்படும்' என்றார்.
மேலும் 'சித்த மருத்துவத்திற்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படுகின்றன. பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக சித்த மருத்துவத்திற்கு என தனி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 4,308 காலிப்பணியிடங்கள் படிப்படியாக விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாநிலங்களவை உறுப்பினரும் திமுக துணை பொதுச்செயலாளருமான அந்தியூர் செல்வராசு, அந்தியூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், மருத்துவத்துறை இயக்குநர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் வானுயரத்திற்கு சீறிப்பாய்ந்த குடிநீர் - போக்குவரத்துப் பாதிப்பு!