ஈரோடு: மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது காவிரி ஆறு. மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் கருங்கல்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் பல கிலோ மீட்டர் தூரம் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
ஆற்றங்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக சலவைத் தொழில், மீன்பிடி தொழில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆற்றில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆகாயத்தாமரை படர்ந்து உள்ளதால் சலவைத் தொழில் செய்யும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்லமுடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி சலவைத் தொழிலாளி குணசீலன் கூறுகையில், " ஈரோடு, நாமக்கல் ஆகிய இரு மாவட்டங்களை இணைக்கும் இந்த காவிரியாற்றில் ஆகாயத்தாமரை படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இரவு நேரங்களில் கொசு, பூச்சிகளின் தொல்லையால் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றோம். கரோனா காலத்தில் தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறைச்சிக் கழிவுகள், பூமாலைகள், குப்பைகளைக் கொட்டி ஆற்றை மாசுபடுத்தி வருகின்றனர். ஆற்றுப்பாலத்தில் கொட்டாதவாறு வேலிகள் அமைக்கப்பட வேண்டும், ஆகாயத்தாமரையை அகற்றி எங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும்" என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து குடியிருப்புவாசி மகேஷ் கூறுகையில், "ஆற்றங்கரையோரத்தில் மின் மயானம், இடுகாடு அமைந்துள்ளதால் பொதுமக்கள் பலரும் இறுதிச்சடங்கு செய்வதற்கு இங்கு வருகின்றனர். ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் சடங்கு செய்துவிட்டு ஆற்றுநீரில் குளிக்க முடியாமல் செல்கின்றனர். எனவே இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்!