ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே உள்ள திம்பம் மலைப்பாதையில் 10 சக்கர லாரிகள் மற்றும் 16.2 டன் எடைக்கு குறைவாக பாரம் ஏற்றி வரும் இலகுரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நேற்று (ஏப்ரல் 9) முதல் பண்ணாரி சோதனை சாவடியில் 16.2 டன்னுக்கு குறைவாக பாரம் ஏற்றி வரும் லாரிகளின் ஆவணங்களை சரிபார்த்த பிறகே வனத்துறையினர் திம்பம் மலைப்பாதையில் செல்ல அனுமதித்துவருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் இருந்து கர்நாடக செல்லும் மூன்றுக்கும் மேற்பட்ட 10 சக்கர சரக்கு லாரிகள் பண்ணாரி சோதனைச்சாவடிக்கு வந்தன. அந்த லாரிகளின் ஆவணங்களை சரிபார்த்தபோது 16.2 டன்னுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததால் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர்கள், லாரிகளை பண்ணாரி சோதனைச்சாவடியின் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் 1 கிமீ தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின் இன்று ஒரு நாள் மட்டும் இலகுரக வாகனங்களுக்கு அனுமதி வேண்டும் என்கு ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை வனத்துறையேற்றதால் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை(ஏப்ரல் 11) சத்தியமங்கலம், தாளவாடியில் முழு கடை அடைப்பு போராட்டமும், பண்ணாரியில் காத்திருப்பு போராட்டமும் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கல்லூரி தேர்வுக் கட்டண உயர்வை திமுக திரும்பப் பெற வேண்டும் - ஓபிஎஸ்