ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நேற்றிரவு வெங்காயங்கள் ஏற்றிக்கொண்டு லாரி சென்றுள்ளது. அதனை பின்தொடர்ந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரியும் சென்றுள்ளது.
ஒலப்பாளையம் பிரிவில் வேகமாக சென்ற வெங்காய லாரி திடீரென வேகத்தை குறைத்துள்ளது. இதனை சற்றும் கவனிக்காத பின் தொடர்ந்து வந்த காய்கறி லாரி , வெங்காய லாரியின் மீது வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் காய்கறி லாரியில் வந்த கோவை மதுகரயைச் சேர்ந்த பாண்டியன், பல்லடத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர், படுகாயங்களுடன் கிடந்த கோவை ரத்தினபுரத்தைச் சேர்ந்த சசி என்பவரை அங்குள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வெங்காய லாரி ஓட்டுநர், நடத்துனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'புனே டூ மதுரை' 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி!