ஈரோடு : ஈரோடு மாவட்டம் அந்தியூர், கடம்பூர், கேர்மாளம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் பேடகம்பன லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். தமிழ்நாடு கர்நாடக எல்லையில் அதிகமாக வாழும் இவர்கள் கன்னட மொழி பேசுகின்றனர்.
தமிழ்நாடு அரசானது இவர்களுக்கு லிங்காயத்து என பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குகிறது. இந்நிலையில், தங்களுக்கு எஸ்டி என சாதிச்சான்றிதழ் வழங்கவேண்டும் என வலியுறுத்தி பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்த லிங்காயத்து மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மலைப்பகுதியில் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள தங்களுக்கு, எஸ்டி சான்றிதழ் வழங்கவில்லை என்றால் இந்த சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பதோடு, தமிழ்நாடு முழுவதும் இப்போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலம், பர்கூர், அந்தியூர், கடம்பூர், தாளவாடி, கேர்மாளம் என 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இச்சமூகத்தைச் சேர்ந்த 53 ஆயிரம் பேர் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி வழக்கு