கோயம்புத்தூர் மாவட்டம், கணபதி பகுதியில் உள்ள காந்தி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர், மணிகண்டன். இவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பர்கள் நால்வருடன் காரில் நேற்று (மே.5) ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள அக்கரை தத்தப்பள்ளி கிராமத்திற்குச் சென்றுள்ளார்.
அங்குள்ள பவானி ஆற்றில் தன் நண்பர்களுடன் குளித்த மணிகண்டன், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாமல் நிலை தடுமாறி நீரில் மூழ்கி மாயமானார். மணிகண்டன் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக பவானி சாகர் காவல் துறையினருக்கும், சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பவானி ஆற்றில் இறங்கி நேற்று(மே.5) மாலை 6 மணி வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மணிகண்டன் உடலை மீட்க முடியாமல் போனது. தொடர்ந்து தீயணைப்பு துறையினரும், மீனவர்களும் இணைந்து இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சுமார் 20 மணி நேரத்து தேடலுக்குப் பின்னர் மணிகண்டன் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பவானிசாகர் காவல் துறையினர் சடலத்தை உடற்கூராய்விற்காக சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தவறான மருத்துவத்தால் உயிரிழந்த பெண்ணின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: நீதிமன்றம் உத்தரவு