சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் குளுகுளுவென ஊட்டிபோல் இருப்பதால், கோடை வெயிலைத் தணிக்க வெளியூர் பயணிகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர். கொடைக்கானல், ஏற்காடு, நீலகிரி போன்ற சொகுசு தங்கும் விடுதிகள் செயல்பட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதே காலநிலையில் உள்ள ஆசனூரில் குவிந்தனர்.
பண்ணாரி சோதனைச்சாவடியில் தாளவாடி தோட்டத்துக்குச் செல்வதாகக் கூறி ஆசனூர், கேர்மாளம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அறை எடுத்துத் தங்கினர்.
ஆசனூரில் தங்கும் விடுதிகளில் மது தராளமாகக் கிடைப்பதால் கூடுதல் தொகைக்கு விற்கப்படுவதாகவும், இதனால் தங்கும் விடுதிகளில் மது அருந்துவோர் குடித்துவிட்டு சாலையோரம் கும்மாளம்போட்டு ஆடுவதாக காவல் துறையினருக்குப் புகார் வந்தது.
இதையடுத்து, ஆசனூர் காவல் துறையினர் தங்கும் விடுதிகளில் சோதனையிட்டனர். அதில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், மது அருந்துவதற்கு அனுமதியளித்ததாகக் கூறி தலமலை, ஆசனூர், அரேப்பாளையம், ஒங்கல்வாடி ஆகிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சட்டவிரோதமாக மது விற்பனை, மது அருந்துதல் உள்ளிட்டவற்றை அனுமதிக்கக் கூடாது என்றும், புதிய நபர் வருகை குறித்து காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்குமாறும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.