காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி வருகிற ஜன. 23, 24, 25 ஆகிய தேதிகளில் கொங்கு மண்டலத்திற்கு வருகை தந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். ஈரோடு மாவட்டத்திற்கு ஜன.24ஆம் தேதி வரும் ராகுல்காந்தி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சஞ்சய்தத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, “மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான். தமிழ்நாட்டில் எடப்பாடி தன்னை விவசாயி என்று கூறிக்கொண்டே வேளாண் சட்டங்களை எப்படி ஆதரிக்கிறார் என்று தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், “கமல் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து, தங்களுடன் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். மதச்சார்பின்மைக்கு ஆதரவாகப் பேசி வரும் அவர் தனித்து நிற்காமல் கூட்டணிக்கு வர வேண்டும். மாநில உரிமைகள் மூலம் பல்வேறு காரியங்களை மாநில அரசு செய்து விடமுடியும். ஆனால், எடப்பாடி மாநில உரிமைகளைப் பயன்படுத்திட ஏனோ அஞ்சுகிறார்.
தமிழ்நாடு மக்கள் திமுக கூட்டணியை விரும்புவதால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இணையான வெற்றியை சட்டப்பேரவை தேர்தலில் பெறும். கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: கரூரில் ஜன. 25ஆம் தேதி ராகுல்காந்தி சுற்றுப்பயணம் - கே.எஸ். அழகிரி