ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள எலத்தூர் பேரூராட்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் சாலை அமைத்தல், கட்டடப்பணிகள் என பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அரசு குத்தகைதாரர்கள் மூலம் நடைபெற்றுவருகின்றன.
இப்பகுதியில் உள்ள மயானத்திற்கும் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனால் மயானத்திற்கு செல்லும் சாலையில் அதிகளவு அரசு அனுமதியின்றி மண் அள்ளியதில் சாலை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், ஆளும் கட்சியினருடன் இணைந்து அரசு திட்டப்பணிகள் குத்தகைதாரர் மற்றும் எலத்தூர் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் எலத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் வட்டாட்சியர் உமாமகேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து மண் அள்ளியுள்ள இடத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
பொதுமக்கள் கூறும் புகார் உண்மை என முடிவுசெய்து சம்பந்தப்பட்ட குத்தகைதாரர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.