ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள கொடுமணல் பகுதியில் கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகழ்வாராய்ச்சிப் பணியை தமிழகத் தொல்லியல் கழகத்தின் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டது.
20க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டுத் தொடங்கிய அகழ்வாராய்ச்சியின் மூலம் இந்தியாவில் இதுவரை கிடைக்கப்பெறாத கல்லறை அமைப்புகள், வண்ண வண்ண பாசி மணிகள், இரும்பை உருக்கும் தொழிற்சாலை அமைவிடம், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்புக் கூடுகள் ஆகியவை கிடைக்கப் பெற்றது.
இப்பொருட்கள் சுமார் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்றும், இவற்றின் மூலம் அந்நிய நாடுகளுடன் தமிழகத் தொடர்பிருந்ததும் தெரியவந்தது. இதனிடையே தொடர் மழையினால் அகழ்வாராய்ச்சி பணி பாதிக்கப்பட்ட போதும் தொடர்ந்து அப்பகுதியில் அகழ்வாராய்ச்சிப் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
அகழ்வாராய்ச்சிப் பணியில் ஈடுபட்ட தமிழகத் தொல்லியல் கழகத்தின் கொடுமணல் அகழ்வாராய்ச்சி இயக்குநர் ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற பணியில் இன்று புதிதாக முதுமக்கள் தாழிக்கள் கண்டறியப்பட்டன.
இதுவரையில் கிடைக்கப்பெற்றதைவிடவும் மிகவும் வித்தியாசமானதாக உள்ள முதுமக்கள் தாழியை சென்னைக்கு ஆராய்ச்சிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும், அதேபோல் இங்கு கிடைக்கப்பெற்ற அனைத்துப் பொருட்களையும் ஆராய்ச்சிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் காலத்தை கண்டறியவுள்ளதாகவும் இயக்குநர் ரஞ்சித் தெரிவித்தார்.