ஈரோடு : சென்னிமலை அருகே உள்ள ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வார்டு கிளைக் கழக பொறுப்பாளர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் நேற்று தொடங்கியது.
இந்த விழாவில் முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் தங்கபாலு, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கேரளா பாராளுமன்ற உறுப்பினர் ரம்யா ஹரிதாஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய கேரளா மாநிலம் ஆலத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் ரம்யா ஹரிதாஸ், தனது தொகுதியில் ஒரு பகுதி தமிழக எல்லையாக உள்ளது. அப்பகுதிக்குச் சென்று நான் இந்தியில் பேச முடியாது. தமிழில் தான் பேச முடியும் என்றார்.
திடீரென்று நடிகர் கமலஹாசன் ஸ்ரீதேவி நடித்த "மூன்றாம் பிறை" திரைப்படத்தில் வரும் "கண்ணே கலைமானே" என்ற பாடலை பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். மேலும் விஜயகாந்த் ரேவதி நடித்த என் "ஆசை மச்சான்" படத்தில் இடம்பெற்ற "ஆடியில சேதி சொல்லி" என்ற பாடலை ராகத்துடன் பாடி அசத்தினார்
மேலும் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், தமிழகத்தில் மாப்பிள்ளை இருந்தால் தெரிவிக்கவும் என கிண்டலாக ரம்யா ஹரிதாஸ் கூறினார்.
இதையும் படிங்க ; 'சோழத்து பெருமை சொல்ல சொல் பூத்து நிக்கும்..!' - 'பொன்னி நதி' முதல் பாடல் வெளியீடு!