ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரள மாநிலத்தில் இருந்து வாகனங்களில் கொண்டு வரப்பட்ட பலாப்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் தற்போது பலாப்பழ சீசன் என்பதால், பழுக்கும் தருவாயில் உள்ள பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. குறிப்பாக கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் பலா பழங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
மரங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பழங்கள் லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டு, நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் சுற்றுவட்டாரங்களில் கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பலாப்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பலாப்பழத்தின் எடைக்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் பலாபழங்களை ஆர்வத்துடன் விலை பேசி வாங்கிச் செல்கின்றனர்.