ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 12 பேர் திமுக சார்பிலும், 2 பேர் அதிமுக சார்பிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவரும் வெற்றி பெற்று உள்ளனர். இந்நிலையில் 12வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோதண்டன் உள்ளார்.
கடந்த 31 ஆம் தேதி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி வெற்றிவேல் மற்றும் செயல் அலுவலர் ஜனார்த்தனன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடங்கி 1 மணி நேரத்திற்கும் மேலாகக் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கோதண்டன் உட்பட 7 கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, கூட்டத்திலிருந்த 8 கவுன்சிலர்கள் பெரும்பான்மையுடன் வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் கவுன்சிலர் கோதண்டன் உள்ளிட்ட 7 உறுப்பினர்கள் கூட்ட அறைக்குள் வந்தனர். அப்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கூறியதும், உறுப்பினர்கள் வராமல் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து பேசிய பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, "கூட்டம் நடைபெறும் நாள், நேரம் குறித்து முறையாகத் தகவல் அளித்துள்ளதாக" கூறி உள்ளார். அதனைத் தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ஜனார்த்தனிடம் இருந்த தீர்மான புத்தகத்தை, கவுன்சிலர் கோதண்டன் பிடுங்கிக் கொண்டு கூட்ட அறையை விட்டு வெளியேறி உள்ளார்.
இந்த நிலையில், இன்று பேரூராட்சி கூட்ட அரங்கில் பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, வெற்றிவேல் தலைமையில் செயல் அலுவலர் ஜனார்த்தனன் முன்னிலையில் அவசர கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 15 கவுன்சிலர்களும் கலந்து கொண்ட நிலையில், கடந்த கூட்டத்தில் தீர்மான புத்தகத்தைப் பறித்து தகராற்றில் ஈடுபட்டதாகக் கூறி, அடுத்து வரும் 2 மாத கூட்டங்களில் கலந்து கொள்ள தடை விதிப்பது தொடர்பாகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அந்த தீர்மானத்திற்கு 8 கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கோதண்டன் வரும் 2 மாதம் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால் பேரூராட்சி கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
இதையும் படிங்க: Rajya Sabha: டெல்லி நிர்வாக திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!