கர்நாடக மாநிலத்தில் மராட்டிய மேம்பாட்டு ஆணையம் அமைப்பதைக் கண்டித்து கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்தன. இதன்படி இன்று பெங்களூரு, தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் சத்தியமங்கலம் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டன.
நேற்றிரவு (டிச. 04) தமிழ்நாடு வந்த கர்நாடக அரசுப் பேருந்து மட்டும் ஓரிரு பயணிகளுடன் மீண்டும் மைசூரு திரும்பிச் சென்றது. சத்தியமங்கலத்திலிருந்து 11 அரசுப் பேருந்துகள் கர்நாடக சென்றுவந்த நிலையில், தற்போது மாற்று ஏற்பாடாக கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.
முழு அடைப்பு காரணமாக தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் சரக்கு வாகனங்களும் பண்ணாரி சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டன. இதனால், பண்ணாரி சோதனைச்சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு எல்லையான தாளவாடிக்கு கர்நாடகா புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாகச் செல்லாமல் தமிழ்நாடு தலைமலை வழித்தடத்தில் தமிழ்நாடு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இரு மாநிலங்களிடையே போக்குவரத்து இல்லாத காரணத்தால் புளிஞ்சூர் சோதனைச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...அபகரித்த நிலத்திற்கான பணம் வேண்டும் - குடும்பத்துடன் குடிநீர் தொட்டிக்கு கீழே குடியேறிய மெக்கானிக்!