ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தில் 1929ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடிகர் ராஜ்குமார் பிறந்தார். இவரது மனைவி பர்வதம்மாள். இவருக்கு சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித்ராஜ்குமார் 3 மகன்களும் பூர்ணிமா, லட்சுமி என்ற மகள்களும் உள்ளனர்.
ஆரம்பத்தில் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த ராஜ்குமாருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் என்ற அளவுக்கு வளர்ச்சி அடைந்தார்.
பின் அவர் தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்துவந்தார். 2000ஆம் ஆண்டு ராஜ்குமார் தொட்டகாஜனூர் கிராமத்தில் தனது பண்ணை வீட்டில் இருந்தபோது சந்தனகடத்தல் வீரப்பனால் பிணைக் கைதியாக கடத்தபட்டார். சில நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானர்.
இந்நிலையில் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 90 பேர் பெங்களூரிலிருந்து தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர். பின்னர் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
"ராஜ்குமார் அவர்களின் தீவிர ரசிகர்கள் நாங்கள். அவர் எங்களை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாங்கள் அனைவரும் கண் தானம் செய்யவுள்ளோம்" என்று தெரிவித்தனர்.