ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இன்று (பிப்.19) ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பரப்புரை செய்த அவர், "தமிழர்களின் தன்மானத்தை நிரூபிக்க வேண்டிய தேர்தல் இது. ஆகவே ஒன்றிணைந்துள்ளோம். மதச்சார்பற்ற கூட்டணி இந்த நாட்டுக்கு என்றென்றும் தேவை. லாபத்தை எண்ணி நான் அரசியலுக்கு வரவில்லை. எனக்கு தேவையான லாபத்தை என் தொழிலில் நீங்கள் ஈட்டித்தந்துள்ளீர்கள்.
காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். நாட்டுக்காக கட்சி வரையறைகளை கடந்து கரம் கோர்த்திருக்கிறேன். தமிழர்களை அடக்கி ஆள முடியாது என அந்த மையத்துக்கு சொல்ல வேண்டும். நீங்கள் நினைத்தால் தமிழ்நாட்டின் பாதையை மட்டுமல்ல, இந்தியாவின் பாதையையும் மாற்றிக் காட்ட முடியும். அதை செய்ய ஆரம்பியுங்கள்.
விஸ்வரூபம் படத்தின் போது என்னை தடுமாற வைத்து ஒரு அம்மையார் சிரித்தார். அப்போது என்னை தொடர்பு கொண்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பயப்படாதே, உதவி வேண்டுமா எனக் கேட்டார். இது நாட்டு பிரச்சனையல்ல என் பிரச்சனை. நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறினேன்.
அறத்துக்காக ஒரு போராட்டம் தொடங்கியுள்ளது. அதில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும். கிழக்கிந்திய கம்பெனியை கஷ்டப்பட்டு போராடி வெளியேற்றினோம். இப்போது வடக்கிந்திய கம்பெனி உள்ளது. அதே சுரண்டலைத்தான் செய்கிறது. இதையும் மாற்ற வேண்டும்." என கூறினார்.
இதையும் படிங்க: பாஜக ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கிறார், நாடு வீழ்ந்திருக்கிறது - கே.எஸ். அழகிரி