ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக செல்கிறது. ஒரு ஆண்டில் 320 நாட்கள் தண்ணீர் பாயும் காலிங்கராயன் வாய்க்காலை விரிவாக்கம் செய்வது, புதுப்பிப்பது, நவீனப்படுத்துவது போன்ற பணிகளுக்காக 76 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு நீர் வள ஆதார அமைப்பு, கடந்த நவம்பர் 13ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பில் பணிகளை முடிக்க வேண்டிய காலம் 24 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
24 மாதங்கள் காலக்கெடு என நிர்ணயித்ததை எதிர்த்து கல்வெட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜன.01) விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன், காலிங்கராயன் வாய்க்காலின் விரிவாக்குதல், புதுப்பித்தல், நவீனப்படுத்துதல் பணிகளை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும், அதேசமயம் பணிகளை முடிக்க 24 மாத அவகாசம் என்பது விவசாயிகளின் நீர் பெறும் உரிமையைப் பாதிக்கும் என்றும், விவசாயிகளின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார். இந்தப் பணிகள் நடைபெறும் இரண்டு ஆண்டுகளுக்கு வாய்க்காலில் நீர் திறப்பு இருக்காது என்பதாலும், பணிகளை முடிக்க வேண்டிய காலத்தைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்றும், நீர் திறந்து விடுவதை நிறுத்தக் கூடாது எனவும் வாதிட்டார்.
டெண்டர் அறிவிப்பில் பணிகள் முடிக்கப்படுவதற்கான கால அளவு 24 மாதங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் நடைமுறையைத் தொடர்ந்தால் அது பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே, அதனை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, நீர் திறந்துவிடப்படும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் மட்டுமே பணிகள் செய்து முடிக்கும் வகையில் அறிவுறுத்தப்படும் என்றும், இதனால் விவசாயிகளின் நலன் பாதிக்கப்படாது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.