சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகை, முல்லை, சம்பங்கிப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தோட்டத்தில் விளையும் பூவை சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர் சங்கத்தில் வியாபாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது.
சத்தியமங்கலகம் பகுதியில் கடும் பனி காரணமாக மல்லிகைப்பூ வரத்து ஏக்கருக்கு கிலோ 30 லிருந்து அரை கிலோவாக குறைந்தது. கடுமையான பனி காரணமாக பூவின் மொட்டுகள் சிறுத்து உற்பத்தி பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக ரூ.2000 ஆக இருந்த மல்லிகை இன்று கிலோ ரூ.4742 ஆக உயர்ந்தது. கிலோ ரூ.20க்கு விற்கப்பட்ட சம்பங்கி இன்று ரூ.100 ஆக உயர்ந்தது. கர்நாடக மாநிலம் மைசூரு சிமோகாவுக்கும், கேரளாவுக்கு பூ அதிகளவில் வேன் மூலம் அனுப்பப்பட்டது.
தற்போது பூ அமெரிக்கா, சார்ஜா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாலும் கோயில்களில் பூஜைகள் நடப்பதாலும் பூ தேவை அதிகரித்து விலையேற்றம் கண்டுள்ளது. அண்மைக்காலமாக குறைந்த விலைக்கு விற்கப்பட்ட பூ விலையேற்றம் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பூ விலை நிலவரம் (கிலோவில்)
- மல்லிகை ரூ.4742
- முல்லை ரூ.880
- காக்கடா ரூ. 400
- செண்டு மல்லி ரூ.70
- ஜாதி மல்லி ரூ.800
- சம்பங்கி ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.