ஈரோடு: சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லைப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் மலர் சந்தையில் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கடந்த சில நாள்களாகப் பனிப்பொழிவு நிலவுவதால் பூக்கள் வரத்து குறைந்ததாலும், நாளை திருமணம் நிகழ்வுகள் மற்றும் தைப்பூசம் போன்ற பண்டிகை காரணமாக மல்லிகை விற்பனை அதிகரித்துள்ளது.
சத்தியமங்கலம் பகுதியிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்த பூக்களை மலர் சந்தையில் ஏலம் எடுப்பதில் வியாபாரிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் மல்லிகைப்பூ கிலோ 1260 ரூபாயிலிருந்து ரூ.2050 ஆக உயர்ந்துள்ளது. பூக்களின் உற்பத்தியை விட அதன் தேவை அதிகமாக இருப்பதால் ஒரே நாளில் கிலோவுக்கு 700 ரூபாய் வரை அதிகரித்துள்ளது என்றே சொல்லாலம். இங்குக் கொள்முதல் செய்யும் பூக்கள் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் வேன் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும், முல்லை கிலோ 1060 இல் இருந்து 1300 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல செண்டுமல்லி 68 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை 105 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ ரூ.70, அரளி ரூ.100க்கும் விற்பனையானது. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: Thaipusam: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்!