சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மோகன், கார் ஒட்டுநர் சுரேஷ், ஜெய் ஆகிய 3 பேரை கடந்த 7ஆம் தேதி சத்தியமங்கலத்தை சேர்ந்த ஒரு கும்பல் இரிடியம் உள்ளதாக கூறி வரவழைத்து அவர்களை கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டியது.
இதைத் தொடர்ந்து மோகனின் மனைவி வித்யா, சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சத்தியமங்கலம் காவல்துறையினர், ஜன.10ஆம் தேதி தொழிலதிபரை கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 9 பேரை கைதுசெய்தனர்.
மேலும் தலைமறைவாகிய இந்த கும்பலை சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், புதுசூரங்குடி கிராமத்தை சேர்ந்த ஏட்டையா என்கிற மணி (56) காவலராக பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர், கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த டெய்லர் சிவா(52) ஆகிய இருவருக்கும் கடத்தல் கும்பலோடு தொடர்ப்பு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இருவரையும் சத்தியமங்கலம் காவல்துறையினர் கைது செய்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.