ஈரோடு: சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் இன்று (மே 19) நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவர் ஆர்.ஜானகி, பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி ஆலோசகர் எம்.பி.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ’புதிய செயலியை’ மக்களுக்கு வழங்குவது தொடர்பாக, நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் பழனிசாமி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. குறிப்பாக, நகராட்சி நிர்வாகத் திறனை மேம்படுத்தும் விதமாக சேவை வழங்குதல் மற்றும் திட்ட நிர்வாகத்தை கண்காணிக்க மென்பொருள் தளம் வடிவமைக்கப்பட்டு தமிழ்நாட்டிலேயே சத்தியமங்கலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மக்கள் புகார் தெரிவிக்க செயலி: நகராட்சிப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் தற்போது பண்ணாரிஅம்மன் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ள புதிய செயலி மூலம் நகராட்சிக்கு குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு, குப்பை அள்ளுதல் உள்ளிட்டப் புகார்களைத் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் நபரை அடையாளம் காண கதவுஎண், வரிசைப் படி வீடு வீடாக கியூ ஆர் கோடு வழங்கப்படும்.
இந்த கியூ ஆர் கோட்டின்படி புகார் தெரிவிப்பவரின் முகவரி அடையாளம் கண்டு அங்கு நகராட்சிப் பணியாளர்கள் சென்று குறைகளை தீர்த்து நடவடிக்கை எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலில் நகராட்சியின் சேவை குறித்த கருத்துகளை மதிப்பீடு செய்ய நட்சத்திர மதிப்பீட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியை பண்ணாரிஅம்மன் கல்லூரி மாணவர்கள் இலவசமாக நகராட்சிக்கு உருவாக்கி வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:மலிவு விலையில் புதிய ஆப்பிள் டிவி - ஆப்பிள் நிறுவனம் திட்டம்?