தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர் (தனி) ஆகிய எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் இரண்டாயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தேர்தலுக்கான ஏற்பாடுகளை அலுவலர்கள் செய்துவருகிறார்கள்.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் வரிசையாகச் சென்று வாக்களிப்பதற்கான வசதிகள், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள், வாக்குச்சாவடி அலுவலர்கள் அமரும் இருக்கைகள் போன்றவை ஏற்பாடுசெய்யப்பட்டன.
வாக்குச்சாவடி மையங்கள் தேர்தலுக்காகத் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 100 மீட்டர், 200 மீட்டர் தொலைவில் கோடுகள் வரையப்பட்டுள்ளன.
மேலும் வாக்குப்பதிவுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் விவிபேட் கருவிகள் ஆகியன ஏற்கனவே தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவுசெய்து சரிபார்க்கப்பட்டன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைக்கும் பணி இன்று (ஏப். 5) காலையிலிருந்து தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்த்து, வாகனங்கள் மூலமாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைக்கவுள்ளனர். இவை பலத்த காவல் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்படவுள்ளது.
இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுவது தொடர்பாக, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஏற்கனவே மூன்றாம்கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ’7ஆம் தேதி முதல் கரோனா கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரம்’ - சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்