நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதாலும் பில்லூர் அணையில் இருந்து உபரிநீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று (செப்.21) காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9 ஆயிரத்து 731 ஆயிரம் கன அடியாக உள்ளதால், 105 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 101 அடியை எட்டியுள்ளது.
நதிநீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் இம்மாதம் 102 அடியை அணை எட்டும்போது உபரிநீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவுபடி தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில், அணை 102 அடியை எட்டிவிடும் என்பதால் ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பவானிசாகர், சத்தியமங்கலம் உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தண்டோரா, ஒலிபெருக்கிகள் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் எந்நேரமும் உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் பவானி ஆற்றில் குளிக்க கூடாது எனவும், தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 101 அடியாகவும் நீர்வரத்து 9 ஆயிரத்து 731 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 3 ஆயிரத்து 50 கன அடியாகவும், நீர் இருப்பு 29.57 டிஎம்சியாகவும் உள்ளது.