தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஏப்.6) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆசனூர் அடுத்த அரேபாளையம் பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர், அந்த வழியாக வந்த சரக்கு வேனில் சோதனையிட்டனர். அதில், வாகனத்தை இயக்கி வந்த கர்நாடக மாநிலம் கொள்ளேகால் வெங்காய வியாபாரி சந்தானத்திடம் உரிய ஆவணங்களின்றி ரூ. 1 லட்சத்து 72ஆயிரத்து 760 ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.
அதேபோல, அரேப்பாளையம் என்ற இடத்தில் தாளவாடி டாஸ்மாக் விற்பனையாளருக்கு சொந்தமான தனியார் பேருந்தை சோதனை செய்ததில், உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 3 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். தாளவாடி அருகே அருள்வாடியில் நடராஜ் என்பவரிடம் இருந்து ரூ.68, 900 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், பனையம்பள்ளி அருகே மேட்டுப்பாளையத்தில் வெங்காயம் விற்று தாளவாடிக்கு லாரியில் திரும்பிய மகேஷ் என்பவரிடம் ரூ.2.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து, 68 லட்சத்து 78 ஆயிரத்து 270 ஆயிரம் ரொக்கமும் 143 பட்டுசேலைகளும் 66 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 32 லட்சத்து 90 ஆயிரத்து 730 ரொக்கம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர்.