தேசிய புலிகள் காப்பகத்தின் விதிமுறைகளின் படி அழிந்து வரும் புலிகளைக் காப்பாற்றவும், வனத்தின் நீர்நிலைகள், விலங்குகளின் நடமாட்டங்களை துல்லியாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க பகல், இரவு நேரத்தில் படம்பிடித்து அலுவலகத்திற்கே படம் அனுப்பும் அதிவீன ட்ரோன் புலிகள் காப்பகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக இந்தியாவில் 13 இடங்களில் ட்ரோன் பயன்பாட்டிற்குக் கொண்டுவர பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் எட்டு இடங்களிலும் தென்னிந்தியாவில் ஐந்து இடங்களிலும் ட்ரோன் பயிற்சி அளிப்பதற்கு இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையம் முன்வந்துள்ளது.
இந்திய வனச்சூழல், வன உயிரி ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து தென்னிந்தியாவில் முதன்முறையாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆளில்லா விமானம் இயக்குதல் பயிற்சி அளிக்கிறது. அடர்ந்த காட்டுப்பகுதியில் வனத்துறையினர் மேற்கொள்ளும் பணி சவாலாக இருப்பதால் மனித விலங்குகள் மோதல் ஏற்படுவதைத் தவிர்பதற்காக தான் 24 மணிநேரமும் காடுகளைக் கண்காணிக்கும் ட்ரோன் தொழில்நுட்பத்தை வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ட்ரோன் பயன்பாடு குறித்து வனத்துறை பணியாளர்கள் 20 பேருக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்துவருகிறது. இதில் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையத்தின் பொறியாளர் கிருஷ்ணகுமார் நேரடி பயிற்சியை அளித்து வருகிறார்.
இதுகுறித்து டேராடூன் இந்திய வன உயிரின ஆராய்ச்சி நிலையம் திட்ட அலுவலர் ரமேஷ் கூறுகையில், "ஆளில்லா விமானம் மூலம் காடுகளில் உள்ள விலங்குகள், மரங்கள் பற்றி விபரங்கள் சேகரிக்கலாம். வனத்தில் 80 மீட்டர் உயரத்திலும், 1 கிமீ சுற்றளவிலும் மர்மநபர்கள், விலங்குகள் நடமாடும் இடத்தைத் துல்லியாக படம் பிடிக்கலாம் இரவு நேரத்தில் கூட நைட் விஷன் கேமரா மூலம் காடுகளில் நடப்பதை அறியமுடியும். ட்ரோன்கள் 20 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரையிலும் பறந்து புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டவை" என்றார்.
இதையும் படிங்க: குமரியில் கவரிங் நகை கொடுத்து ஏமாற்றும் பலே ஆசாமிகள் - போலீஸ் வலை